சென்னை: இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்வதாகவும், அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு, உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இப்படி அனைத்து விசாரணைகளும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடைபெற்று வருகின்றன.
இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. அதேசமயம் தற்போது வெளிவரும் உண்மைகள், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் நீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையிலும் எதிர் தரப்பினர் செயல்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது.
கரூர் துயரத்தில் தன் மகனை பறிகொடுத்த தந்தை பன்னீர்செல்வம் சார்பில் CBI விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி தற்போது கூறும் உண்மைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. தன் மனைவி மற்றும் மகனை கைவிட்டு தனியாக வாழும் பன்னீர்செல்வம், தற்போது துயரத்திற்கு காரணமான தவெக கட்சி அளிப்பதாக சொன்ன நிவாரண பணத்துக்காக வழக்கு தொடுத்துள்ளார் என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளார் அச்சிறுவனை இழந்த தாய்.
அதேபோல தன் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் மூலம் ஏமாற்றி போலியாக கையெழுத்து பெற்று அவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது பற்றி செல்வராஜ் வெளியிட்டுள்ள காணொலியில் தனக்கு தன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதே தெரியாது என்கிறார்.
இப்படி கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பலரை அரசியல் உள்நோக்கத்திற்காக முறைகேடாக பயன்படுத்துவதை அதிமுக மற்றும் தவெக செய்து வருவது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் திருபுவனம் அஜித்குமார் இறந்தது தொடர்பாக தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது, உயர்நீதிமன்றம் அமைக்கும் SIT விசாரணை வேண்டும், அதற்காக வழக்கு தொடர இருந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றப்பட்டு விட்டது என்றும், ஏன் சிபிஐ பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள் எனவும் பேசினார் விஜய்.
ஆனால் இன்று தவெக சம்மந்தப்பட்ட கரூர் வழக்கில் மறைமுகமாக இறந்தோர் குடும்பத்தில் உள்ளவர்களிடம் முறைகேடாக கையெழுத்து பெற்றும், பணத்தாசை காட்டியும் CBI விசாரணை வேண்டி வழக்கு தொடுத்துள்ளது தவெக. இதற்காக அதிமுக மற்றும் பாஜகவின் மறைமுக உதவியை தவெக பெற்றுள்ளது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
குற்றவாளிகள், தவறு செய்தவர்கள், ஊழல்வாதிகள் அனைவரையும் அரவணைத்து தூய்மையாக்கும் Washing Machine ஆன பாஜக பின்னால் ஏன் ஒளிந்து கொண்டுள்ளீர்கள் விஜய்?
இதை எல்லாம் பார்க்கும் போது இறந்தவர்களை வைத்து தங்களின் அரசியல் ஆதாயங்களைத் தீர்த்துக்கொள்ள எதிர்க்கட்சியினரும், புதுக்கட்சியினரும் முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது நீதிமன்றத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றும் அற்பசெயல்.
ஏய்த்துப்பிழைப்பதையே வாடிக்கையாக கொண்ட எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரத்திலும் மக்களை ஏய்க்க நினைக்கிறார். தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் மறந்து அரசியல் சுய லாபத்திற்காக இப்படி மூன்றாம்தர அரசியலை கையில் எடுத்து இருப்பது வெட்கக்கேடு. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.