கெய்ரோ: பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் தீவிர முயற்சியினால் அண்மையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் பின்னர் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் காரணமாக காசாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை கண்காணிக்க அமெரிக்கா உட்பட சில நாடுகள் தங்களது வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பணியமர்த்தி உள்ளது. இந்த சூழலில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) நடைபெறுகிறது.
சுமார் 20 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் அல் சிசி அழைப்பு விடுத்துள்ளனர்.
எகிப்து நேரப்படி நாளை மதியம் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதில் பிரதமர் மோடி பங்கேற்றால் அது பல்வேறு வகையில் சாதகமாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
அந்த வகையில் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலை திரும்புவது சார்ந்து இந்தியாவின் நிலைப்பாடு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்திப்பதற்கான வாய்ப்பு, எகிப்து உடனான இந்தியாவின் உறவு, பாலஸ்தீனத்துக்கான இந்தியாவின் ஆதரவு உள்ளிட்டவை உலக அளவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.