லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜசோய் கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் (வயது 26). இவர் கடந்த ஆண்டு அர்ஷி என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டார். சூரஜ் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். அர்ஷி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோர்ட்டில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், வெளியூரில் தங்கி இருந்த சூரஜ் கடந்த சில நாட்களுக்குமுன் ஜசோய் கிராமத்திற்கு வந்துள்ளார். அவர் நேற்று கிராமத்தில் உள்ள தெருவில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சூரஜை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சூராஜை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சூராஜை தாக்கிவிட்டு தப்பியோடிய நசீம் அல்வி, வாக்கர், நயிம் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கையிப் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கலப்பு திருமணம் செய்ததால் பெண் வீட்டார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.