சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் கே.பராசரன், 75 ஆண்டுகாலமாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதை கொண்டாடும் வகையில் பவள விழாவும், 50 ஆண்டுகளாக மூத்த வழக்கறிஞராக நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் பொன் விழாவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பி்ல் நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத்தும், எம்.எம்.சுந்தரேஷூம் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். ‘‘நீதித்துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் உறுதி செய்தவர் மூத்த வழக்கறிஞர் பராசரன். அவரிடம் பாலபாடம் கற்ற பலர் இன்று நீதிபதிகளாக ஜொலித்து வருகின்றனர். அவருக்கு விழா எடுப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். வழக்கறிஞர் தொழிலின் முன்னோடியாக, தொழிலை எப்படி நேர்த்தியாக கையாள வேண்டும் என இன்றைய இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தவர் பராசரன்’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், விக்ரம்நாத் ஆகியோர் புகழாரம் சூட்டினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ‘‘சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட பராசரன் என்ற மாமனிதனுக்கு கண்டிப்பாக விழா எடுக்க வேண்டும். அவர் ஆற்றியுள்ள செம்மையான சட்டப்பணியை பாராட்டுவது நம் அனைவரது கடமை. அறமும், தர்மமும், சட்ட அறிவும் கலந்தது தான் அவருடைய வாழ்க்கை. வழக்குகளை தர்மத்தின் மூலமாகவும், அறத்தின் மூலமாகவும் பார்த்தவர் என்றார்.
தான் வழக்கறிஞராக இருந்தபோது, எப்படி வழக்குகளுக்கு முழுமையாக தயாராக வேண்டும், பொறுமையாக எப்படி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்ற தொழில் வித்தைகளை மூத்த வழக்கறிஞரான பராசரனிடமிருந்து கற்றுக்கொண்டதாக, உயர் நீ்திமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்வதா பெருமிதமாக குறிப்பிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எம்.எஸ்.ரமேஷ், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இறுதியாக மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.சதீஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகளும், பார் கவுன்சில் உறுப்பினர்களும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.