சென்னை: தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 2025 இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில், ஆறு மாவட்டங்களுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 2025-ஐ தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, திருநீர் மலை நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 29 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன. போலியோ தடுப்பூசி முயற்சிகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், தமிழ்நாடு கடந்த 21 ஆண்டுகளாக போலியோ நோயின்றி உள்ளது.
தமிழ்நாட்டில் இறுதியாக 2004ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் போலியோ நோய் கண்டறியப்பட்டது. இந்தியா அளவில் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் 2011ம் ஆண்டு போலியோ வைரஸ் இறுதியாக கண்டறியப்பட்டது. 2012ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) “போலியோ வைரஸ் பரவல் கொண்ட தொற்றுநோய் நாடுகள்” பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி, 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று போலியோவில் இருந்து விடுபட்ட நாடாக சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆக 11 ஆண்டுகள் இந்தியா முழுமைக்கும் போலியோ இல்லாத நாடாக இருந்து வருகிறது. 21 ஆண்டுகள் தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை வருடத்திற்கு இரண்டு முறை தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2017ம் ஆண்டில் இருந்து பல சுற்றுகளாக துணை (சிறப்பு) தேசிய போலியோ சொட்டு மருந்து தினம் (SNID) ஜூன் முதல் நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் நடைபெறுகிறது. 2018ம் ஆண்டில் இருந்து “இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு” (IEAG) ஆலோசனை படி துணை (சிறப்பு) தேசிய போலியோ சொட்டு மருந்து தினம் (SNID) ஒரு சுற்றாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி அன்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 57 லட்சம் குழந்தைகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 59.20 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றார்கள். அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுவதால், “இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு” (IEAG) முக்கியமான குறியீட்டு அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டு, 21 மாநிலங்களிலுள்ள 269 மாவட்டங்களை பாதிக்கப் படக் கூடியதாக அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேற்காணும் 6 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 7,091 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இம்மையங்களில் 7.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து செலுத்தப்படாமல் விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாள் அன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாள் அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 320 அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் உள்ள பயண வழி மையங்களில் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் சுகாதார குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து மையங்களில் 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால், போலியோ நோயில்லாத நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், போலியோ வைரஸ் பரவல் வாய்ப்புகளில் இருந்து நம்முடைய குழந்தைகளை பாதுகாக்கவும், அனைத்து பெற்றோர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருநது வழங்கி, இந்த பூமியில் இருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்! என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த் குமாரி கமலக் கண்ணன், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், துணை மேயர் காமராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், இணை இயக்குநர் (தடுப்பூசி) வினய், மாவட்ட சுகாதார அலுவலர் பானுமதி மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.