பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்

பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

அரேபிய நாடுகளின் துணையுடன் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக இரு நாடுகளும் தங்களது பிடியில் இருக்கும் பிணைய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிணைய கைதிகள்
இஸ்ரேல் பிணைய கைதிகள்

திங்கட்கிழமை முதல் பிணைய கைதிகளை விடுவிக்க தொடங்குவோம் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸிடம் 20 இஸ்ரேல் பிணைய கைதிகள் உள்ளனர். அவர்களை ஹமாஸ் விடுவிக்கும்போது, இஸ்ரேல் தங்களது பிடியில் இருக்கும் 2,000 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை ஹமாஸ் அமைப்பிடம் எகிப்து மூலம் முன்வைத்துள்ளார். அதில், காசாவை சர்வதேச நிபுணர்களை கொண்டு நிர்வகிப்போம் என்றும், ஹமாஸ் தனது ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, ஹமாஸ் காசாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் – ஹமாஸ் போர்

ஆயுதங்கள்

இதுகுறித்து ஹமாஸ் அரசியல் நிர்வாக உறுப்பினர் ஹோஸ்ஸம் பத்ரன் அளித்த பேட்டியில், “நாங்கள் கத்தார் மற்றும் எகிப்து மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். காசாவிலிருந்து ஹமாஸ் உட்பட எந்தவொரு பாலஸ்தீனர்களையும் வெளியேற்றுவதை ஏற்க முடியாது.

காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் அவர்களது சொந்த நிலத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் அங்கு இருப்பது இயல்பான ஒன்றுதான். அதேபோல், ஆயுதங்களை கீழே வைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

இன்று நாம் முழு பாலஸ்தீனிய மக்களின் ஆயுதங்களைப் பற்றி பேசுகிறோம். மேலும், பாலஸ்தீனிய பிரச்னையில் இப்போதும் எதிர்காலத்திலும் ஆயுதங்கள் ஒரு இயற்கையான விஷயம் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்,” என்று குறிப்பிட்டார்.

அமைதி பேச்சுவார்த்தையில் எகிப்தும் கத்தாரும் கலந்து கொண்டு வருவதால், நாங்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர்நிறுத்தம்

மேலும், டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது கட்டத் திட்டம் மிகவும் சிக்கலானதுமானதும் கடினமானதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால், காசாவை விட்டு வெளியே சென்ற பாலஸ்தீனிய மக்கள் மீண்டும் காசாவிற்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

தங்களது வீடு இருக்கிறதா அல்லது மண்ணோடு மண்ணாகிவிட்டதா என்பதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

ஹமாஸின் போலீஸ் படையினர் காசா முழுவதும் நிறுத்தப்பட்டு, அவர்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

போர்நிறுத்தத்தை இஸ்ரேல் மக்களும் கொண்டாடி வருகின்றனர். திங்கள்கிழமை எகிப்தில் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சத் திட்டம்?

இம்மாநாட்டில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான அமைதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. டொனால்டு ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் திட்டம் குறித்து இதில் முக்கியமாக பேசப்பட உள்ளது.

இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஹமாஸ் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கலந்து கொள்வாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்காவின் திட்டப்படி, காசாவிலிருந்து இஸ்ரேல் படைகள் படிப்படையாக வெளியேறும் என்றும், அதற்கு பதிலாக எகிப்து, கத்தார், துருக்கி போன்ற அரேபிய நாடுகளின் படைகள் அமெரிக்க வழிகாட்டுதலில் நிறுத்தப்படவுள்ளன.

அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் காசாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.