புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்களை அழைக்காதது வேண்டுமென்றே அல்ல என்றும், அது தொழில்நுட்பப் பிரச்சினை என்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி கூறினார்.
ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர் கான் முட்டாகி கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையாகியது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன.
இந்த சூழலில், அமைச்சர் முட்டாகி இன்று மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அதில் பெண் பத்திரிகையாளர்களை கலந்து கொள்ள அழைத்தார்.
அப்போது பேசிய முட்டாகி, “அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பைப் பொறுத்தவரை, அது உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதில் பங்கேற்கும் பத்திரிகையாளர்களின் பட்டியலும் உடனடியாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக எங்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பங்கேற்போர் பட்டியல் வழங்கப்பட்டது. இது ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை. எங்கள் சகாக்கள் அந்த குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களின் பட்டியலுக்கு அழைப்பை அனுப்ப முடிவு செய்திருந்தனர், இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறைக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்திருந்தது.