புதுடெல்லி,
இமாசல பிரதேசத்தில் ஆபரேஷன் புளூ ஸ்டார் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், முன்னாள் மத்திய மந்திரியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறு. இந்த நடவடிக்கை அவருடைய உயிரையே பறித்து விட்டது என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பஞ்சாப்பில் சீக்கியர்களின் புனித தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பொற்கோவில் உள்ளது. 1984-ம் ஆண்டில் இந்த கோவிலில் பிந்த்ரன்வாலே உள்ளிட்ட பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தனர் என்றும் கூறி அப்போதிருந்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
பொற்கோவிலில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையாக ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கையை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். பொற்கோவிலுக்குள் நடந்த இந்த நடவடிக்கை சீக்கியர்களின் மத்தியில் கோபம் ஏற்படுத்தியது. இது நடந்த சில மாதங்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட சீக்கிய கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு அப்போதிருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே சீக்கிய கலவரம் ஏற்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.