இந்தியாவின் அனைத்து நகைக்கடைகளிலும் பொதுவாக தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஒரு வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணம் என்னவென்றும் பெரும்பாலான மக்கள் அறியாமல் இருக்கின்றனர். இது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் வளம், செல்வம் மற்றும் மரியாதைக்கான அடையாளமாகக் கருதப்படுகின்றன. நகைகள் வாங்கும்போது, அதன் ஒளி, பிரகாசம் மற்றும் காட்சி மிக முக்கியம் ஆகும்.
இதற்காகவே நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் மடித்து வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கின்றனர்.

ரோஸ் நிறம், வெள்ளி நகைகளுக்கு ஒரு சிறப்புப் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளை நிறத்துடன் ஒத்த வெள்ளி நகைகள் மேலும் பிரகாசமாகத் தெரிய பிங்க் நிறக் காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி தங்க நகைகளின் மஞ்சள் நிறத்தைக் கூட இந்தப் பிங்க் நிற காகிதம் அழகாகப் பிரதிபலிக்கிறது. இதனால் நகைகள் மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை உயர்தரமானவையாகவும், அதிக விலையுடையவையாகவும் உணர்வதற்கு வழி வகுக்கிறது.
வணிக அனுபவத்தின் அடிப்படையில் இந்த ரோஜா நிறக் காகிதம் வணிகத்திற்கும் ஆதாயம் அளிப்பதை உறுதி செய்துள்ளனர். வேறு நிறங்களில் இதுபோல் விளைவுகள் இல்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
உதாரணமாக, வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்கள் வெள்ளி மற்றும் தங்க நகைகளின் பிரகாசத்தைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.