தெற்கு கரோலினா,
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் செயின்ட் ஹெலினா தீவு பகுதியில் உணவு விடுதியுடன் கூடிய பார் ஒன்று உள்ளது. இதில், மதுபானங்களுடன் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும். இதில், பலர் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது, திடீரென சிலர் துப்பாக்கிகளால் பலமுறை சுட்டுள்ளனர்.
இதில் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் பாரில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பியோடினார்கள். சம்பவம் நடந்தபோது, நூற்றுக்கணக்கானோர் அந்த பாரில் இருந்துள்ளனர்.
அவர்களில் பலர் அடைக்கலம் தேடி, அருகேயுள்ள கடைகளுக்குள்ளும், கட்டிடங்களுக்கு உள்ளேயும் புகுந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 20 பேர் வரை காயமடைந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து அவசரகால மருத்துவ பணியாளர்கள் உடனடியாக வந்து, காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.