லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (வயது 35). இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே தலைமறைவாக இருந்த ஷாகித்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பாக்பத் மாவட்டம் சரூர்பூர் கிராமத்தில் ஷாகித் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து , அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஷாகித், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
இதையடுத்து, ஷாகித் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஷாகித் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஷாகித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. என்கவுன்டர் நடந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.