புதுடெல்லி,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தீர்ப்புக்கு பின் டெல்லியில் திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது இடைக்கால உத்தரவுதான். நிரந்தர உத்தரவு அல்ல. அருணா ஜெகதீசன் ஆணையம் முக்கியமானது. அந்த ஆணைய விசாரணையை உச்சநீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம்?. யார் மீது தவறு உள்ளது?, யாரிடம் கவனக்குறைவு இருந்தது? என்பதை சொல்லக்கூடிய முக்கியமான ஆணையம்.
சிறப்பு புலனாய்வுக்குழு இதுவரை என்ன விசாரித்தார்களோ அதனை டிரான்ஸ்பர் செய்ய சொல்லி சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. கரூர் துயரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நபர்கள் தங்கள் அனுமதி இல்லாமல் போலியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. ஒருவேளை அந்த மனுக்கள் போலியானதாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், தற்போதைய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும். சிபிஐ கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரிக்கும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது. கூட்ட நெரிசல் வழக்கில் இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டிற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றது என ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.