சென்னை: கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்துக்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்துக்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்துக்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கரூர் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும். சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி: இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய முதல் கட்சி பாமகதான். இதன் முலம் இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்று பாமக நம்புகிறது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திராவிட மாடல் அரசின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. கிரிமினல் ஆட்சிக்கு தலையில் குட்டு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.இதேபோல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வி.கே சசிகலா ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
விசிக எம்.பி. ரவிக்குமார்: விஜய் தரப்பின் மனு மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என பலர் பதிவிட்டு வருகின்றனர். பாஜக சொன்னதால்தான் விஜய், கட்சி தொடங்கினார் என நாங்கள் சொல்லி வருகிறோம். மகாராஷ்டிரா மாடலில் தமிழகத்திலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய்.