சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா – மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன.

ஏன்?

கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது சீனா.

அந்தக் கட்டுப்பாடுகளின் படி, இனி ஏதேனும் ஒரு நாடோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, இந்தக் கனிமங்களை வாங்க வேண்டுமானால் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும்.

இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாதமும், சீனா ஏழு அரிய கனிம வளங்களின் ஏற்றுமதிகளுக்கு இதுப்போல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

அரிய கனிமங்கள்
அரிய கனிமங்கள்

அடுத்ததாக…

அரிய கனிமங்களை தோண்டி எடுக்கும் சிறப்பு தொழில்நுட்ப இயந்திரங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கும் தற்போது சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறன.

மேலும் குறைந்தபட்சம் 0.1 சதவிகிதத்தில் இருந்து அரிய கனிமங்கள் கொண்டிருக்கும் அரிய கனிம காந்தங்கள் மற்றும் சில செமி கண்டக்டர்களை சீனாவில் இருந்து வாங்கவும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும்.

ஸ்பெஷல் அனுமதி, தடை என்பது இந்தக் கனிமங்களையோ, இயந்திரங்களையோ வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கும்போது, அது எதற்காக வாங்கப்படுகிறது என்று கட்டாயம் சீனாவிடம் தெரிவிக்க வேண்டும்.

அந்தக் காரணத்தைப் பொறுத்தே, அவைகளை ஏற்றுமதி செய்வது குறித்து சீனா முடிவு செய்யும்.

இந்தக் கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள்?

இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து சீனா வர்த்தக அமைச்சகத் தரப்பு, “இந்தக் கட்டுப்பாடுகள் சீனாவின் ஏற்றுமதிகளை முறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை.

தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றது. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது.

சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இது கட்டுப்பாடுகள் தானே தவிர, தடை அல்ல. நிறுவனங்கள் தேவையான உரிமங்கள் வைத்திருந்தால், இப்போதும் சீனா அந்தக் கனிமங்களை ஏற்றுமதி செய்யும். இது குறித்து பிற நாடுகளுக்கு முன்னரே சீனா அறிவித்துவிட்டது” என்று கூறியுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா

அமெரிக்காவிற்கு என்ன பிரச்னை?

சீனா அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் வர்த்தகம், உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தைப் பாதிப்படைய வைக்க நினைக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார்.

இது உண்மையா என்று கேட்டால் ஒருவகையில் உண்மை தான்.

பெரிய அளவிலான கனிமங்கள் சீனாவிடம் தான் உள்ளது. சீனா தனது கட்டுப்பாட்டுகளை அதிகரிக்கும்போது, பிற இடங்களில் இந்தக் கனிமங்களின் விலை அதிகரிக்கும். இதனால், உலக அளவில் உற்பத்திகள் குறையும். அவை குறையும் போது, அதை வைத்து உற்பத்தி செய்யும் பொருள்களின் விலையும் கணிசமாக உயரும்.

இந்தக் கனிமங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் மோட்டர்கள், செமி கண்டக்டர்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக, இந்தக் கட்டுப்பாடுகளால் இவைகளின் விலை உயரலாம்.

ராணுவ தளவாடங்களுக்காக நாடுகள் இந்தக் கனிமங்களை வாங்கும்போது, அந்தக் காரணத்தை சீனாவிடம் உலக நாடுகள் கூறுவதில் சிக்கலை சந்திக்கும்.

உற்பத்திகள் பாதிக்கப்படும்போது, தானாக வர்த்தகங்களும், பொருளாதாரமும் பாதிப்படையும்.

இந்தியாவிற்கு ஏதேனும் பிரச்னையா?

இந்தக் கட்டுப்பாடுகளினால் நிச்சயம் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. இறக்குமதிகளுக்கு இந்தியா சீனாவை மிகவும் நம்பியுள்ளது.

இதனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பத்துறை பெரிதும் பாதிப்படையும்.

ஏற்கெனவே, அமெரிக்காவின் வரியால் இந்தியாவின் தொழில்துறை பாதிப்படைந்துள்ளது. இப்போது சீனாவின் இந்தக் கட்டுப்பாடுகளும் சேர்வது மேலும் நெகட்டிவாக மாறும்.

அதனால், இப்போதே இந்தியா இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா – சீனா

அமெரிக்கா – சீனா பேச்சுவார்த்தை

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, அமெரிக்காவும், சீனாவும் வரி விதிப்புகள் மூலம் மாறி மாறி மோதிக்கொண்டன.

இந்த மோதலால் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகித வரி வரை விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருள்களின் மீது 110 சதவிகிதம் வரை வரி விதித்தது.

இவை ஒருவழியாக, கடந்த ஜூன் மாதத்தில் நடந்த இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. இதனால், இரு நாடுகள் பரஸ்பரமாக விதித்த வரிகளை நிறுத்தி வைத்தது.

அமெரிக்கா, சீனாவிற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தான், சீனா இந்தக் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதை எதிர்க்கும் விதமாக, ட்ரம்ப் தற்போது சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார். ஏற்கெனவே தற்போது சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரி விதித்து வருகிறது.

ஆக, இந்த வரியால் இரு நாடுகளின் உறவும் தற்போது பாதிப்படைந்துள்ளது.

சீனாவின் பதிலடி

‘அமெரிக்காவும் தேச நலன் என்கிற பெயரில் அந்த நாட்டின் ஏற்றுமதிகளைக் நீண்ட காலமாக கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால், இப்போது சீனா ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும்போது மட்டும் அமெரிக்கா எதிர்க்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு’ என்று சீனா குற்றம்சாட்டுகிறது.

அமெரிக்காவிற்கு செல்லும் சீன கப்பல்களுக்கு புதிய துறைமுக கட்டணத்தை வசூலிக்க உள்ளது அமெரிக்கா. இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்க கொடியோடு வரும் கப்பல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கப்பல் போன்ற அமெரிக்காவிற்கு சம்பந்தமான எந்தவொரு கப்பல்களுக்கும் சீனா புதிய துறைமுகக் கட்டணத்தை வசூலிக்க உள்ளது.

அமெரிக்காவின் கட்டணம் என்று அமலுக்கு வருகிறதோ, அதே அன்று சீனாவும் அந்தக் கட்டணத்தை வசூலிக்கும் என்றும் சீனா கூறியுள்ளது.

உலக நாடுகள்
உலக நாடுகள்

உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

இது கிட்டத்தட்ட அமெரிக்கா, சீனா நாடுகளுக்கான வர்த்தக போர் தொடக்கத்தின் அறிகுறி தான் என்கிறார்கள். உலகளவில் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா, சீனா மோதிக்கொள்ளும்போது, விநியோக சங்கிலிகள் பாதிக்கும். இதனால், விலைவாசி அதிகரிக்கும்.

ஏற்கெனவே பல உலக நாடுகள் பொருளாதார சிக்கல்களில் தத்தளித்துகொண்டிருக்கின்றன. மேலும், வேலையிழப்புகள், பற்றாக்குறை அதிகம் இருந்து வருகின்றன.

இதனால், சில உலக நாடுகளின் வன்முறைகள், போராட்டங்கள் வெடித்து, ஆட்சி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதற்கு ஏதோ ஒரு வகையில் அந்தந்த நாடுகளின் பொருளாதார பலவீனமும் காரணம் ஆகும்.

ஆக, இந்த வர்த்தக போர் உலக நாடுகளில் இன்னமும் நிலைமையை மோசமாக்கலாம்.

இது சரியாக வாய்ப்பு உண்டா?

நேற்று ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “கவலைப்பட வேண்டாம் சீனா, அனைத்தும் சரியாகிவிடும்.

மிகவும் மதிக்கப்படும் அதிபர் ஜி தற்போது ஒரு கெட்ட விஷயத்தை சந்தித்துள்ளார். அவருக்கு அவரது நாட்டின் மீது எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது. எனக்கு அப்படி தான். அமெரிக்கா சீனாவிற்கு உதவி செய்ய நினைக்கிறது… பாதிக்க அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

இது ட்ரம்பின் ஒருவித சமாதான தூது என்றே எடுத்துகொள்ளலாம். இதை பயன்படுத்திகொண்டு சீனா அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தினால், எதாவது நன்மை பயக்கலாம்… அல்லது… அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப், சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நடக்க உள்ளது. அப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்றால், உறவில் முன்னேற்றம் ஏற்படலாம்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.