ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

ஜெருசலேம்: எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. காசாவில் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அமைதி உடன்பாட்டின்படி, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் நேற்று செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக திரும்பினர். ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 28 பிணைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேரின் உடல்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அமைதி உடன்பாட்டின்படி, ஹமாஸ் குழுவினர் காசாவில் இருந்து வெளியேற வேண்டும். இதன்படி அவர்கள் காசாவுக்கு அனுப்பப்படாமல் எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

போரின்போது காசா பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மட்டும் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். பின்னர் ஜெருசலேம் நகரில் உள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களால் காசா போர் நிறுத்தம் சாத்தியமாகி உள்ளது. அனைவருக்கும் நன்றி. போர்க் காலம் முடிந்து, மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளது. இதுவரை 8 போர்களை நிறுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

இதன்பின்னர், எகிப்து சென்ற ட்ரம்ப், ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட 31 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார். மாநாட்டின் நிறைவாக, ட்ரம்ப் முன்னிலையில் காசாஅமைதி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது. காசா அமைதி மாநாட்டில் பங்கேற்க எகிப்து அரசு சார்பில் இஸ்ரேல், ஹமாஸ், ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், 3 தரப்பினரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.