சென்னை: கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதைப் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல், ‘நீதி வெல்லும்’ என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை உய ர்நீதிமன்றத்தில் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசரித்த உச்ச நீதிமன்ற அமர்வு வாதங்களை பதிவு செய்துகொண்டது.
இந்த நிலையில், தவெக தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஒய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ‘நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் நெரிசல் சம்பவம் நடந்த தினத்தன்று, இரவு 11.15 மணியளவில் அச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தார். அடுத்த நாள் செப்.28 அன்று நிதியுதவி அறிவித்து ஒரு பதிவைப் பகிர்ந்தார். தொடர்ந்து செப்.30-ம் தேதியன்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கரூர் சம்பவத்தில் சதி இருப்பதாகக் கூறியதோடு, தனது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வரை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். தற்போது, இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில் ‘நீதி வெல்லும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
இன்று காலை உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, “ தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும்.” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.