புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவில் முதல் முறையாக பெண் பொறியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்), உள்துறை அமைச்சகத்தின் கீழ் செல்படும் விமானப் பிரிவு கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் எம்ஐ 17, சீட்டா, துருவ் ரக ஹெலிகாப்டர்கள், மற்றும் விஐபிக்.கள் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் எம்பரர் ஜெட் விமானமும் உள்ளது.
இப்பிரிவில் விமான பொறியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இதனால் 3 பிஎஸ்ப் அதிகாரிகளுக்கு விமான பொறியாளர் பயிற்சியை முதலில் விமானப்படை வழங்கி வந்தது. சில காரணங்களால் விமானப்படையால் தொடர்ந்து பயிற்சியை வழங்க முடியவில்லை. இதனால் எல்லை பாதுகாப்பு படையே, தங்கள் அதிகாரிகளுக்கு விமான பொறியாளருக்கான பயிற்சியை அளிக்க உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையின் பெண் இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்திரி மற்றும் 4 ஆண் அதிகாரிகள் விமானப் பிரிவில் பொறியாளர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் தங்கள் பயிற்சியை சமீபத்தில் முடித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்திரிக்கு விமானப்பிரிவில் பெண் பொறியாளர் பணி, வழங்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் தல்ஜித் சிங் சவுத்ரி வழங்கினார். உடன் பயிற்சி பெற்ற 4 ஆண் அதிகாரிகளுக்கும் விமானப் பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படையின் 50 ஆண்டு கால வரலாற்றில், விமானப் பிரிவில் பெண் பொறியாளர் பணியாற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.