பாட்னா: எதிர்வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 100 இடங்களில் போட்டியிட அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பிஹார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் கூறியதாவது: பிஹார் அரசியல் பல ஆண்டுகளாக பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி பற்றியதாகவே உள்ளது. எனவே நாங்கள் மூன்றாவது மாற்று அணி அமைக்க விரும்புகிறோம். எதிர்வரும் பிஹார் தேர்தலில் சுமார் 100 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். இதனால் இரு அணிகளும் எங்கள் இருப்பை உணர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஆர்ஜேடி தலைவர்கள் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்து நான் கடிதம் எழுதினேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. கடந்த 2020 தேர்தலில் மதச்சார்பற்ற வாக்குகளை பிரித்ததாக ஆர்ஜேடி கூட்டணி எங்கள் மீது குற்றம் சாட்டியது. இனி அவ்வாறு குற்றம் சுமத்த முடியாது. மூன்றாவது அணி தொடர்பாக ஒத்தக் கருத்து கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.