பாட்னா: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் மகதோ. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.
எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி என எந்த தேர்தலையும் விட்டுவைப்பதில்லை. மக்களின் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்ற கனவை துரத்திக் கொண்டுள்ளார் மகதோ. வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் இவர் போட்டியிடுகிறார்.
இதுகுறித்த மகதோ கூறியதாவது: சிறிய வீட்டில்தான் வாழ்கிறேன். 2004 முதல் தொடர்ந்து நகராட்சி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் மனம் தளராமல் போட்டியிட்டு வருகிறேன். சீமாஞ்சலின் காந்தி என்றழைக்கப்பட்ட மறைந்த தஸ்லிமுதீன், முன்னாள் மத்திய அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகளை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஆனால், இதுவரை வெற்றிபெறவில்லை.
பாட்டாளியான எனக்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. நான் போட்டியிட அவர்கள்தான் நன்கொடை அளிக்கின்றனர். என்னைப்போன்ற சாமானிய தலைவரை உருவாக்கிட மக்கள் விரும்புகிறார்கள். இந்த முறை நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.
இவ்வாறு மகதோ தெரிவித்தார்.
ஆடு, கோழி, முட்டைகளை விற்பனை செய்வதன் மூலமாக தனது கணவரின் பிரச்சாரத்துக்கு நிதி திரட்டலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மகதோவின் மனைவி. பிரச்சனையின்போது அவர் எப்போதும் மக்களுடன் இருப்பார். வாக்காளர்கள் இந்த முறை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என்கிறார் நம்பிக்கையுடன்.