புதுடெல்லி: 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் (Joel Mokyr, Philippe Aghion, Peter Howitt) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல்,இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதில், ஜோயல் மோகீருக்கு ஒரு பாதியும், பிலிப்பே அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய இருவருக்கு மற்றொரு பாதியும் பகிர்ந்தளிக்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலமாக நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை அடையாளப்படுத்தியதற்காக ஜோயலுக்கு வழங்கப்படுகிறது. பின்னர், பழைய கொள்கைகளை நீக்கி புதிய கொள்கைகள் மூலமாக நீடித்த வளர்ச்சி என்ற ஆய்வுக்காக மற்ற இருவருக்கும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் பிறந்த ஜோயல் மோகிர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பிலிப்பே அகியோன் பாரிஸில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். பீட்டர் ஹோவிட் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.