`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டணிக் கட்சியான பாஜகவும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரை அண்ணா நகரில் நேற்று தொடங்கினார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், இணைப் பார்வையாளர் சுதாகர்ரெட்டி, தமாக தலைவர் ஜி.கே.வாசன், புதியநீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி. உதயகுமார் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்ததலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுற்றுப்பயண பாடலை அண்ணாமலையும், குறும்படத்தை மத்திய அமைச்சர் எல்.முருகனும் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: சென்னையில் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டபோது அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்றனர். திமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள். தமிழகத்தில் ஆட்சியா நடைபெறுகிறது. வெறும் காட்சிகள் மட்டுமே நடைபெறுகின்றன. திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி முன்னுரை எழுதினார் பாஜக முடிவுரை எழுத வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு இன்னும் 177 நாள்கள் தான் உள்ளன. திமுக ஆட்சிக்கு எதிராக கவுன்டவுன் இன்றிலிருந்து தொடங்குகிறது.
விடுபட்டோருக்கு மகளிர் உதவித் தொகை ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என உதயநிதி சொல்லியுள்ளார். ஆட்சிக்கு வந்து நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை சும்மாயிருந்து விட்டு தேர்தல் வருவதால் இப்போது தருவதாகச் சொன்னால் எப்படி. இந்த அரசு விடியாத அரசு, மக்களுக்கு விரோதமான அரசு. இந்த திராவிட மாடல் அரசை விட்டுக்கு அனுப்ப வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக எல்லோரும் தேஜ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எல்லோரும் என்றால் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் மத்திய அரசின் உதவி தேவை. அதை எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். மாநிலம் சிறப்பாக இயங்கி இரட்டை இயந்திர அரசு நடைபெற வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.