கொல்கத்தா: ‘‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி, நள்ளிரவு 12.30 மணிக்கு வெளியில் வந்தது எப்படி?’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி (23) ஒருவர் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஆண் நண்பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியது. ஆண் நண்பரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: துர்காபூரில் மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற செயல்களை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். அதேநேரத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு 23 வயது பெண் எப்படி வெளியில் வந்தார். இதற்கு யார் பொறுப்பு?
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும். இந்த நேரத்தில் தனியார் கல்லூரிகள், தங்கள் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ‘இரவு நேர கலாச்சாரத்துக்கு’ முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதில், பாதிக்கப்பட்ட பெண் மீதே முதல்வர் மம்தா குற்றம் சாட்டுகிறார். சந்தேஷ்காலியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இப்போது அதேபோல் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.