வியாசர்பாடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் செய்த 2-வது மகன்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இதற்கு மூளையாக செயல்பட்டதாக, சிறையிலிருந்த ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மகனான அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைதாகினர். இந்நிலையில், நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.

பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நாகேந்திரன் உடல் நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறையில் உள்ள அவரது மகன்கள் அஸ்வத்தாமன், அஜித்ராஜ் ஆகியோர் ஜாமீனில் வந்திருந்த நிலையில், 2-வது மகன் அஜித்ராஜ் (30), தனது தந்தையின் உடல் முன்பு நேற்று திருமணம் செய்து கொண்டார்.

நாகேந்திரனின் 2-வது மகன் அஜித்ராஜுக்கும், அம்பத்தூரைச் சேர்ந்த ஷகினா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் விரைவில் நடக்கவிருந்த நிலையில், நாகேந்திரன் உயிரிழந்தார். எனவே தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையில் நாகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் சென்னையின் முக்கிய ரவுடிகள் பலர் கலந்துகொள்ள இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நாகேந்திரனின் வலது கரமான முக்கிய ரவுடி பிரகாஷ் என்ற வெள்ளை பிரகாஷ், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக கொடுங்கையூர் பார்வதி நகரில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீஸார் துப்பாக்கி முனையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில், காரில் வந்த வெள்ளை பிரகாஷை கைது செய்து அவரிடமிருந்து 40 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள், கத்திகள், துப்பாக்கி தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.