விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.
சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் கோவில்பட்டியை சேர்ந்த சுஜாத் என்பவருக்கு சொந்தமான அட்டை மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை பிஹாரை சேர்ந்த சோன்லால் (17), அபிதாப் (30), என்.சுப்பையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (35) ஆகியோர் மில்லில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கிய போது விஷவாயு தாக்கியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே சோன்லால் உயிரிழந்தார். அபிதாப், கணேசன் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஷவாயு தாக்கி உயிரிழந்த சோன்லால் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.