“20 ஆண்டுகள் பிள்ளையைப்போல் வளர்த்தேன்'' – வெட்டப்பட்ட அரசமரத்தைப் பார்த்து கதறியழுத மூதாட்டி

ஒரு மரக்கன்றை நட்டு, அதனை மரமாக வளர்த்து பெரியதாக மாற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே மரக்கன்று ஓரளவு பெரிய மரமாக மாறும்.

அவ்வாறு ஆசையாக வளர்த்த மரத்தை யாராவது வெட்டினால் எப்படி இருக்கும்? சத்தீஷ்கரில் மூதாட்டி ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக அரசு மரக்கன்று ஒன்றை மிகவும் ஆசையாக நட்டு வளர்த்து வந்தார்.

அங்குள்ள கெய்ராகர் மாவட்டத்தில் உள்ள சாரா கோண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த தியோலாபாய் (85) என்ற மூதாட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்தில் அரசு மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார்.

அந்த மூதாட்டி அடிக்கடி அந்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி, தனது குழந்தையை போல் அதனை வளர்த்து வந்தார். ஆனால் அந்த மரத்தை சிலர் கடந்த 5 ஆம் தேதி வெட்ட முயற்சி செய்தனர். கிராம மக்கள் அதை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அதே மர்ம நபர்கள் அடுத்த நாள் அதிகாலையில் வந்து அந்த மரத்தை வெட்டிச் சென்றுவிட்டனர். அவர்கள் மரம் அறுக்கும் இயந்திரத்தின் உதவியுடன் மரத்தை வெட்டி சாய்த்திருந்தனர்.

மரம் வெட்டப்பட்ட இடத்தில் அதன் அடிமட்ட தூர் பகுதி மட்டுமே இருந்தது. அதனை பார்த்த மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். அவர் மரம் வெட்டப்பட்ட நிலையில் எஞ்சி இருக்கும் தூர் பகுதியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

மரம் வெட்டப்பட்டு எஞ்சி இருந்த தூர் பகுதியில் தனது தலையை வைத்து அழுத காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

அக்காட்சியை மத்திய அமைச்சர் கிரண் தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“இது மிகவும் இதயத்தை உலுக்கும் காட்சி. 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் நட்ட அரசு மரம் வெட்டப்பட்டதைக் கண்டு ஒரு வயதான பெண் கதறி அழுகிறார். இது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்ததாக என்னிடம் சொன்னார்கள்,” என்று கிரண் ரிஜிஜு தனது எக்ஸ்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இம்ரான் மேமன் என்பவர் அங்கு ஒரு நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்திற்கு எதிர்ப்புறம் இருந்த அரசு நிலத்தை சமப்படுத்த விரும்பினார். இதற்காக அங்கு நின்ற மரத்தை வெட்டியுள்ளனர்.

பிரகாஷ் என்பவரை அழைத்து வந்து, இயந்திரத்தின் உதவியுடன் மேமன் அந்த மரத்தை வெட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மரம் வெட்ட பயன்படுத்திய இயந்திரத்தை ஆற்றுக்குள் போட்டுவிட்டதும் தெரிய வந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.