Bison: `இந்தப் படம் என்னுடைய ஒட்டுமொத்த எமோஷனும் கர்வமும்’ – இயக்குநர் மாரி செல்வராஜ்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ்  இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ், “இந்த பைசன் திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது வானதி கணேசன் தான்.

பைசன் திரைப்பட விழா: மாரி செல்வராஜ் - வானதி கணேசன்
பைசன் திரைப்பட விழா: மாரி செல்வராஜ் – வானதி கணேசன்

இவரை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். என்னுடைய ஹீரோவாக இருந்தவர். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்கிறேன்.

இவரின் மூலக்கதையை வைத்து ஒரு படம் உருவாக்கப்போகிறேன் என அனுமதி கேட்டபோது, என்னை நம்பி அதற்கான ஒத்துழைப்பை இதுவரைக் கொடுத்துக்கொண்டிருப்பவர் வானதி கணேசன்.

உழைப்பு, நேர்மை எனப் பல போராட்டங்களைக் கடந்து உயரத்துக்கு வந்தவர்களையும், பல இளைஞர்களின் கதையையும் என் ஸ்டைலில், என்னுடைய அரசியல் பார்வையில் நான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.

இப்படத்தை பா. ரஞ்சித் உள்ளிட்ட என் நண்பர்கள் பலர் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்கள். இருந்தாலும், வானதி கணேசன் அவர்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

நான் இப்போது திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்றாலும் மனதில் ஒருபாரம் ஏறும். நண்பர்களுடன் உரையாடும்போது, அங்கிருந்து செய்திகள் வரும்போதெல்லாம் அந்தச் சூழல் பதற்றமாக இருக்கும். எனவே, இதை மாற்ற வேண்டும், ஒரு கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினேன்.

இக்கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நிகழும் சூழலை இப்பொழுது உள்ள இளைஞர்களிடம் கடத்த என் பார்வையில் எழுதப்பட்ட கதை.

பைசன் திரைப்பட விழா
பைசன் திரைப்பட விழா

தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற முடியாத இளைஞர்கள் பற்றிய கதை. திரைத்துறையில் நான் பெற்ற வெற்றிக்குப் பிறகு என் ஊருக்காகவும், என் மாவட்ட, தென் தமிழகத்துக்காக நான் செய்திருக்கும் கதை.

என்னுடைய உச்சபட்ச எமோஷ்னலும் கர்வமும் இந்தப் படம். இந்தப் படம் வெற்றிப்பெற்றது என்பதைத் தாண்டி, தமிழ் சமூகம் இத்திரைப்படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது, என்ன கலந்துரையாடுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

மாரி செல்வராஜ் என்ற ஒருவனின் அரசியல் புரிதலுக்கும், என் பார்வைக்கும் முழுக் காரணம் ராம் சார். என்னுடைய பெரும் பலம். இந்தப் படம் என்னுடைய பெஸ்ட் எனப் பாராட்டினார்.

என்னுடைய இத்தனை வருட சினிமா பயணத்தில் நான் கற்றுக் கொண்ட கலைகளை எல்லாம் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் இதற்கு முன்பு தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இல்லை.

“பாலிய நண்பனின் மரண நினைவை போல கடந்து போகிறது தீபாவளி ” எனக் கவிதையை கூட எழுதி இருந்தேன். ஆனால், இப்பொழுது இந்த பைசன் திரைப்படத்திற்காக நான் முதன் முதலாக என் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் தீபாவளியை கொண்டாட காத்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.