Dude: நாம வேணாம் சொல்லியும்… – டூட் படம் பற்றி பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

 `டூட்' படம்
`டூட்’ படம்

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், ” ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

யாராவது கதை சொல்ல வந்தால் கதைச் சுருக்கத்தை மெயில் பண்ண சொல்லுவேன்.

அந்த மாதிரிதான் ‘டூட்’ படத்தின் கதைச் சுருக்கம் வந்தது. படித்தேன் நன்றாகதான் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தான் நான் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களில் நடித்திருந்தேன்.

அதனால் மீண்டும் லவ் ஸ்டோரி படம் பண்ண வேண்டுமா என்று நினைத்தேன். ரிஸ்க் எடுக்க நினைத்து கதையை மெயில் பண்ண சொல்லிவிட்டேன்.

எங்கு போனாலும் கீர்த்திஸ்வரன் என்ற பையன் உங்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் எனச் சொல்வார்கள்.

‘பிரதீப், கீர்த்தி என்ற பையன் ஒரு நல்ல கதை வைத்திருக்கிறார்’ என ஒரு முறை மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் இருந்தும் கால் வந்தது.

அதனால் கீர்த்திஸ்வரனைக் கூப்பிட்டேன். நம்ம வேணாம் என்று சொல்லியும், நம்மளை ஒருத்தர் வேணும் என்று சொல்கிறாரே அவரைப் பார்த்தே ஆக வேண்டும் எனக் கூப்பிட்டேன்.

ஒவ்வொரு சீனையும், டயலாக்கையும் சொல்லி அசத்திட்டார். இருந்தாலும் மீண்டும் லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டுமா? என்று நினைத்தேன்.

டைம் கிடைக்கும்போது பண்ணலாம் என்று சொல்லி அனுபிச்சு விட்டேன். அடுத்த நாள் தயாரிப்பாளரை கையோடு கூட்டிட்டு வந்துட்டார்.

நீங்கள் நினைக்கின்ற மாதிரி லவ் ஸ்டோரி மட்டும் இல்ல என்று சொன்னார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. கொஞ்சநாள் கழித்து பண்ணலாம் என்று சொல்லி அனுப்பிட்டேன்.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

ஆனால் ஒரு மாதம் இந்தக் கதை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கனவில் கூட இந்த கதை வரும். ஒரு நாள் கீர்த்திஸ்வரன் என்ன செய்கிறார் என்று என்னுடன் இருக்கும் ரமேஷிடம் கேட்டேன்.

‘கீர்த்திஸ்வரன் வேறு ஒருவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இருந்தாலும் உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது’ அவர் சொன்னார்.

சரி ஓகே அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னேன். இந்த ஹீரோ இப்படி எல்லாம் பண்றாரு என்ன வைத்து காமெடி எதுவும் பண்ணிட மாட்டீங்களே என்று கேட்டேன்.

‘என்னை நம்புங்கள் ப்ரோ’ என்று கீர்த்திஸ்வரன் சொன்னார். அந்த சமயத்தில் கோமாளி படம் பண்ணும்போது நான் எப்படி இருந்தேனோ அதுதான் நினைவிற்கு வந்தது.

அவருடைய விடாமுயற்சி. ஒரு நல்ல விஷயத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற அவருடைய எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது.

அதனால் ‘டூட்’ படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். அன்றையில் இருந்து கீர்த்தீஸ்வரனை என் தம்பியாகாத்தான் பார்க்கிறேன்” என்று பிரதீப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.