"இன்னும் 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" – சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

காரைக்குடி நிகழ்ச்சியில் நயினார்

அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்க பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நூறடி சாலையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், “சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் வெள்ளையனை விரட்ட ஸ்ரீரங்கத்தில் ஜம்பு பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெள்ளையருக்கு எதிராக போராடினார்கள். அதேபோல் திமுக ஆட்சியை விரட்ட செட்டிநாட்டு சீமையான காரைக்குடியில் நானும் பிரகடனம் செய்கிறேன். சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்று திரண்டு மக்கள் விரோத திமுக அரசை அகற்ற சூளுரைப்போம்.

காரைக்குடி கூட்டத்தில்

திமுக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அமித் ஷா திமுக-வை அழிக்க நினைக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். உங்களை அழிக்க நாங்கள் தேவையில்லை, அதை மக்களே பார்த்துக் கொள்வார்கள் என அமித் ஷா பதில் அளித்தார். அமித் ஷாவின் வியூகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்.

கரூர் சம்பவத்தில் தமிழக அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் அனைத்து உண்மைகளும் வெளி வரும். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கவுண்டவுன் தொடங்கி விட்டது. இன்னும 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.