IPL 2026, RCB Team : ஐபிஎல் சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிட்டதட்ட இரு தசாப்தங்களுக்கு மிக நெருக்கமாக காத்திருந்த ஆர்சிபி அணி, கடந்த ஆண்டு ஒருவழியாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அடுத்த ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்க உள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற உள்ள ஏலத்தில், அதாவது டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் மினி ஏலத்தை (Mini Auction) எதிர்கொள்ள, கோப்பையை வென்ற முக்கிய வீரர்களை (Core Team) தக்கவைத்துக்கொள்ள RCB திட்டமிட்டுள்ளது. விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகலாம் என சமீபத்தில் வெளியான ஊகங்கள் குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தாலும், அணிக்கு ஒரு தூணாக இருக்கும் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதே லேட்டஸ்ட் அப்டேட்.
Add Zee News as a Preferred Source
ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட (Retain) வாய்ப்புள்ள முக்கிய வீரர்கள்:
ஐபிஎல் 2025 தொடரில் வெற்றிக்கு வித்திட்ட அனுபவமிக்க மற்றும் இளம் வீரர்களைத் தக்கவைப்பதில் RCB நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. கோப்பையை வென்ற மைய அணியை பெரும்பாலும் அப்படியே வைத்திருப்பதன் மூலம் வரும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என ஆர்சிபி நினைக்கிறது. அந்தவகையில், ஐபிஎல் தொடரில் RCB-யை முதல் முறையாக வழிநடத்தி சாம்பியன் ஆக்கிய கேப்டன் என்பதால், ராஜத் பட்டிதார் தக்கவைப்பு உறுதியாகிறது. அணியின் ஐகான் (Icon) மற்றும் 2025 சீசனில் அதிக ரன் குவித்த வீரர் என்பதால், விராட் கோலியும் தக்கவைக்கப்படுவார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் சீரான தொடக்க வீரராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் என்பதால் ஃபில் சால்ட் (Phil Salt) ஆர்சிபி அணியால் தக்க வைக்கப்படும் பிளேயர்கள் பட்டியலில் உள்ளார். இதேபோல், ஜிதேஷ் சர்மா, குர்ணால் பாண்டியா ஆகியோரும் தக்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
RCB தக்க வைக்க வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியல்:
ராஜத் பட்டிதார், விராட் கோலி, ஃபில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஸ்வஸ்திக் சிகாரா, குர்ணால் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், மனோஜ் பந்தகே, ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, அபினந்தன் சிங், மோஹித் ரதீ, யாஷ் தயாள், ஸ்வப்னில் சிங்.
RCB அணியால் விடுவிக்கப்பட (Release) வாய்ப்புள்ள வீரர்கள்:
லியாம் லிவிங்ஸ்டோன்: இவர் ரூ. 8.75 கோடிக்கு வாங்கப்பட்டாலும், 10 போட்டிகளில் வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் பெரிய பங்களிப்பு இல்லை.
ரசிக் சலாம் டார்: சுமார் ரூ. 6 கோடி செலவில் வாங்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததால் விடுவிக்கப்படலாம். இதேபோல், மயங்க் அகர்வால், டிம் சீஃபர்ட், பிளெஸ்ஸிங் முஜராபானி மற்றும் நுவன் துஷாரா போன்ற வீரர்களும் விடுவிக்கப்படலாம்.
ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான RCB-யின் வியூகம்: ஐபிஎல் கோப்பையை வென்ற RCB நிர்வாகம் அணியில் பெரிய மாற்றங்கள் செய்ய விரும்பவில்லை. மிகக் குறைந்த அளவிலான வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. செயல்படாத வீரர்களை மட்டும் விடுவித்து, அந்தத் தொகையைக் கொண்டு அணிக்குத் தேவைப்படும் சில குறிப்பிட்ட பிளேயர்களை நிரப்புவது தான் RCB அணியின் இலக்காகும்.
About the Author
S.Karthikeyan