புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 135, ஆங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆள்கிறது. இதன் இரண்டு துணை முதல்வர்களுடன் முக்கிய கூட்டணியாக பாஜக உள்ளது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருந்தது.
கடைசியாக இன்று காலை தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை அறிவிக்க காங்கிரஸும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மெகா கூட்டணி கட்சித் தலைவர்கள் வட்டாரத் தகவல்களின்படி, பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ஆர்ஜேடி அதிக இடங்களாக 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அடுத்ததாக, காங்கிரஸுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விகாஷீல் இன்சான்(விஐபி) 16, இடது சாரிகளுக்கு 29 முதல் 31 தொகுதிகளும் கிடைத்துள்ளன.
இருப்பினும், மெகா கூட்டணியால் திட்டமிடப்பட்ட துணை முதல்வர்கள் குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகாது என தெரிகிறது. இதனிடையே, துணை முதல்வர் வேட்பாளராக தனது பெயரை அறிவிக்க விஐபி (விகாஷீல் இன்சான்) கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிஹாரில் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இந்த முறை அந்தக் கட்சி குறைவான இடங்களில் போட்டியிடுகிறது.
கடந்த முறை காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு மிகக்குறைந்ததாக 19 எம்எல்ஏ-க்களை பெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்டக் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யாதது அதன் காரணம் எனப் புகார் எழுந்தது. காங்கிரஸின் இந்த தவறான நடவடிக்கையால் தான் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிஹாரில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததாக ஆர்ஜேடி கட்சியினர் புலம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.