'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' – இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த தடுப்பாட்டக்காரரான அபினேஷ் மோகன்தாஸ், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்திய அணிக்காக தேர்வாகியிருக்கிறார். அபினேஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத்தொடங்கினோம்.

“நான் 2020ல வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். சிறு வயதிலேயே எங்க அப்பா இறந்ததுனால எங்க அம்மா தான் என்ன படிக்க வைக்கிறாங்க. என் கூட பிறந்தவங்க ரெண்டு தங்கச்சி. நான்தான் எங்க வீட்டுல மூத்த பிள்ளை. எங்க ஊர் வடுவூர் ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க.

அவங்க மூலமா தான் எனக்கு கபடி மேல ஆசை வந்தது. எங்க அம்மாவால 3 பேரையும் படிக்க வைக்க முடியல. ரொம்ப ஏழ்மையான நிலையில இருக்கும்போது AMC டீம் தான் தேனியில் இருக்கிற SDAT விளையாட்டு விடுதியில் என்னை சேர்த்து விட்டாங்க. 2025 வரை அங்கதான் படிச்சு பயிற்சி பெற்றேன். அங்க எனக்கு ராஜேஷ், நாகராஜ் ங்கிற ரெண்டு கோச்சும் 5 வருஷமா எனக்கு பயிற்சி குடுத்து நான் இந்த நிலைமைக்கு வர்றதுக்கு முக்கிய காரணமா இருந்தாங்க.

இப்ப நான் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதலாமாண்டு படிச்சிட்டு இருக்கேன். அங்க இருக்கிற பயிற்சி ஆசிரியர் திரு‌. புவியரசு எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தாங்க.

ஆசிய விளையாட்டு போட்டியில் முதன் முதலா இந்த வருஷம் கபடி விளையாட்டை சேர்த்தாங்க. அதுல கலந்து கொண்டு சேலத்தில் நடந்த கபடி விளையாட்டில் நான் செலக்ட் ஆனேன். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க.

அபினேஷ் மோகன்தாஸ்

அதற்காக தமிழ்நாடு சார்பாக ஹரியத்துவார்ல ஜூன் 28 முதல் ஜூலை1 வரை நடந்த கபடி விளையாட்டில் விளையாடினேன். அங்க நல்லா விளையாடினேன். இந்திய அணியில் கபடி பயிற்சி முகாம் ல விளையாட 32 பேர் தேர்வானாங்க. ‘அந்த 32 பேர்ல நானும் ஒரு ஆள் தேர்வாகி இருக்கேன்னு சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு’ .

“15 வருஷத்துக்கு பிறகு இந்தியாவுக்காக தமிழ்நாடு பிளேயரா நான் விளையாட போறேன். வரும் அக்டோபர் 19 முதல் 23 வரை பக்ரைனில் நடைபெற உள்ள 3வது யூத் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட போறேன்.

என்னை இந்த அளவுக்கு விளையாட வைத்த தமிழ்நாடு அமெச்சர் கபடி சங்கத்தின் தலைவர் சோலை எம். ராஜா மற்றும் பொதுச் செயலாளர் ஏ‌‌. சஃபில்லா இவங்க ரெண்டு பேரோட முயற்சி தான் என இந்த அளவுக்கு கொண்டு வர காரணமா இருந்தது.

இந்த நேரத்துல இவங்க ரெண்டு பேருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நான் இப்போ என்னதான் இந்திய அணிக்காக விளையாட போனாலும் என்ன இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்த வடுவூர் துரை. ஆசைத்தம்பி நினைவு AMC கபடி கழகத்துக்கு தான் இந்தப் புகழ் கிடைக்கணும். எனக்கு யாருமே உறுதுணையாக இருந்ததில்லை.

அபினேஷ் மோகன்தாஸ்

வீட்டில் மூத்த பிள்ளை இப்படி விளையாட போறான்னெல்லாம் என்னை பேசுனாங்க. அப்போ எனக்கு ரொம்ப உறுதுணையா வந்த ஒரே ஒரு ஆள் திருவாரூர் மாவட்டம் கபடி கழக செயலாளர் திரு இராஜ. ராஜேந்திரன் தான். இவருக்குத்தான் எனக்கு கிடைத்த புகழ் எல்லாம் கிடைக்கணும். அவர் மட்டும் இல்லன்னா நான் இந்த இடத்துக்கு வர முடிஞ்சிருக்காது. அதனால ராஜேந்திரன் அய்யாவுக்கு இதன் வழியா என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.

கிரிக்கெட், ஹாக்கி மட்டும் நம்ம முக்கியமான விளையாட்டு இல்ல‌. கபடி நம்ம தமிழரோட முக்கியமான விளையாட்டுல ஒன்னு. திறமை இருக்கிறவங்க பயந்து இருக்காம துணிந்து வாங்க. நானும் மத்த பசங்க மாதிரி ஆரம்பத்துல கபடியை ஒரு விளையாட்டாத்தான் பார்த்தேன்.

அப்போ எனக்கு தெரியல நான் இந்திய அணிக்காக விளையாட போறேன்னு. இன்று நான் வந்த மாதிரி நாளைக்கு நீங்களும் வரலாம். என்னை இந்த அளவு உயர வைத்த AMC கபடி கழகத்துக்கும் என் குடும்பத்துக்கும் தமிழ்நாடு அமைச்சர் விளையாட்டு ஆணையத்துக்கும் நன்றியை கூறுகிறேன். நான் ஒரு போதும் தமிழ்நாட்டு தலை குனிய விடமாட்டேன்.” என மனம் நெகிழ்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.