Arjun Tendulkar: ஐபிஎல் 2025 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல், பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டிருந்த இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார். 2025-26ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரில், அவர் கோவா அணிக்காக களமிறங்க உள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், 2025ஆம் ஆண்டில் ஒரு சீனியர் போட்டியில் கூட விளையாடவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு, அவர் எந்த ஒரு உள்நாட்டு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி டிராபி தொடர், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கம்பேக் ஆக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source

மும்பையிலிருந்து கோவாவுக்கு மாறிய அர்ஜுன்
மும்பை அணியில் வாய்ப்புகள் கிடைக்காததால், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முன்னேற்ற 2022-23 சீசனுக்கு முன்பு அர்ஜுன் கோவா அணிக்கு மாறினார். இந்த முடிவு, அவருக்கு ஒரு நல்ல திருப்பு முனையை அளித்தது. கோவா அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். 26 வயதான அர்ஜுன் இதுவரை 17 முதல் தர போட்டிகளில் விளையாடி, 37 விக்கெட்டுகளையும், 532 ரன்களையும் எடுத்துள்ளார். தனது முதல் ரஞ்சி போட்டியிலேயே ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து, தனது பேட்டிங் திறமையையும் நிரூபித்தார். இது தவிர லிஸ்ட் ஏ போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் ஏமாற்றங்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியால் 2021ல் ஏலத்தில் எடுக்கப்பட்ட அர்ஜுன் 2021, 2022 மற்றும் 2025 ஆகிய மூன்று சீசன்களிலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல், பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டார். அவர் இதுவரை ஐபிஎல்லில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த தொடர் ஏமாற்றங்களுக்கு பிறகு, இந்த ரஞ்சி சீசன் அவருக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
கோவா அணியின் ரஞ்சி பயணம்
கோவா அணி, 2024-25 சீசனில் பிளேட் குரூப் சாம்பியன் பட்டம் வென்று, இந்த ஆண்டு முதல் எலைட் குரூப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சீசனில், சண்டிகர் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. அதை தொடர்ந்து கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற வலுவான அணிகளை கோவா எதிர்கொள்ள உள்ளது. இந்த சீசனில், தீப்ராஜ் கோன்கர் கோவா அணியின் கேப்டனாகவும், டெல்லியில் இருந்து கோவா அணிக்கு மாறியுள்ள லலித் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். சுயாஷ் பிரபுதேசாய், தர்ஷன் மிஷால் போன்ற அனுபவ வீரர்களுடன், அர்ஜுன் டெண்டுல்கரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு பிறகு, இந்த ரஞ்சி சீசன் அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலைட் குரூப்பில், வலுவான அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதன் மூலம், தனது திறமையை மீண்டும் நிரூபித்து, இந்திய கிரிக்கெட் உலகில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. அவரது கம்பேக்-ஐ காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
About the Author
RK Spark