புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெறுவதால், இந்தியாவில் முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துள்ளது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் ‘தைனிக் ஜாக்ரன்’ இந்தி செய்தித் தாள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு மதத்தவர்களின் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் நடப்பதே காரணம். இதனால் இந்திய நாட்டின் கலாச்சாரம், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அப்படி ஊடுருவி வருபவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும், அவர்களை மீண்டும் நாடு கடத்த வேண்டும்.
தற்போது முஸ்லிம்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 4.5 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு காரணம் இந்துக்களிடம் குழந்தை பிறப்பு சரிந்துள்ளது என்று கூற முடியாது. பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளவர்களால் ஏற்பட்டுள்ள மாற்றம். இதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது சுதந்திரம், மொழி, கலாச்சாரம் ஆகிய இந்த மூன்றையும் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ளாவிட்டால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.
ஆனால், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான் போன்ற எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
ஊடுருவல் அந்த மாநிலங்களில் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவுக்குள் ஊடுருவும் மையமாக மேற்கு வங்கம் தொடர்ந்து நீடிக்கிறது. ஊடுருவல்கார்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கத்தான் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்பட்டது. அகதிகளாக வருபவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
ஊடுருவல்காரர்கள் இந்திய வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறுகின்றனர். ஊடுருவல்காரர்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்தால், இந்திய அரசியலமைப்பு சட்டங்களை நீங்கள் அசுத்தப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். ஊடுருவல்காரர்களை கண்டுபிடித்து மத்திய அரசு ஒழிக்கும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.