சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிப் பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, பேருந்து, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல முயற்சி செய்வார்கள். குறிப்பாக, ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்க ஆர்பிஎஃப் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, ரயிலில் பட்டாசுகளை எடுத்துச்செல்வதை தடுக்க தீவிர சோதனை விரைவில் தொடங்க உள்ளது. ரயிலில் பட்டாசு எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்பிஎஃப் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட தீவிபத்து ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்லத் தடை உள்ளது. சிலர் பண்டிகைக் காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
எனவே தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாகப் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.