இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை நியூடெல்லி விமான நிலையத்தில் இந்தியா திரும்பினார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி, இந்தியாவில் இருந்து அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். விமான நிலையத்தில் விராட் கோலியை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அதனை மரியாதையாக தவிர்த்த கோலி, உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினார்.
Add Zee News as a Preferred Source
லண்டலில் விராட் கோலி
இந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை முதல் முறையாக சாம்பியனாக்கியதும் விராட் கோலி பெரிய முடிவை அறிவித்து இருந்தார். கடந்த மே மாதம் இங்கிலாந்து தொடருக்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் 2025 முடிவடைந்தவுடனே மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இரு குழந்தைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டார் விராட் கோலி. இந்திய அணி இன்று அக்டோபர் 15ம் தேதி இரண்டு பிரிவுகளாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட உள்ளது. விமானத்தில் பிஸினஸ் கிளாஸ் இருக்கைகள் கிடைப்பதை கருத்தில் கொண்டு, ஒரு குழு காலை மற்றும் மற்றொன்று மாலை பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.
இந்த ஒருநாள் தொடர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிரோபிக்கு பிறகு நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியாகும். விராட் கோலிக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடும், சர்வதேச போட்டியாக இந்த தொடர் அமைந்துள்ளது. அவரது ஓய்வு குறித்து பல்வேறு விவாதங்கள் நிலவி வரும் நிலையில், இந்த தொடர் அவரது கரியருக்கு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. ஒருநாள் அணியை அறிவிக்கும் போது, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 2027 உலகக்கோப்பை திட்டங்களில் இடம் பெறுவார்களா என்ற கேள்விக்கு நேரடி பதில் அளிக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இந்த ஜோடிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒருநாள் போட்டியில் மட்டுமே இப்போது விளையாடி வரும் இவ்விருவரும் 2027 வரை இதே துடிப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கான பதிலாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடருக்கு முன், விஜய் ஹஜாரே கோப்பையில் குறைந்தது 3 அல்லது 4 ஆட்டங்களில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், 15 ஆண்டுகள் கழித்து கோலிக்கும், 2018க்கு பிறகு ரோஹித்துக்கும், லிஸ்ட்-ஏ தொடரில் மீண்டும் களம் காணும் வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலியா தொடரில், கோலியின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
About the Author
RK Spark