புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு, அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பிஹார் தேர்தலுக்கு முன் லாலு மற்றும் அவரது குடும்பத்துக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது இரு ஐஆர்சிடிசி ஓட்டல்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் சுஜாதா ஓட்டலுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக பினாமி நிறுவனம் மூலம் 3 ஏக்கர் நிலத்தை லாலு பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அப்போது தாங்கள் குற்றமற்றர்கள் எனவும் விசாரணையை எதிர்கொள்ள தயார் என்றும் லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. ஆனால் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்றும் டெண்டர்கள் நியாயமாக வழங்கப்பட்டதாகவும் லாலுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிலத்துக்கு ஈடாக ஓட்டல் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்குவதில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து லாலு சதி செய்ததும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் முதற்கட்ட விசாரணை முடிவுகளில் தெரிய வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தலுக்கு ஆர்ஜேடி தயாராகி வருகிறது. கட்சியின் முதல்வர் முகமாக தேஜஸ்வி யாதவ் கருதப்படுகிறார். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.