பிஹார் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

பாட்னா: வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர்களும் அவரது பெற்றோருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்கட்டத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) என்பதால், வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 12ம் தேதி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தது. அதோடு, 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக நேற்று (அக். 14) வெளியிட்டது. 57 வேட்பாளர்களைக் கொண்ட ஐக்கிய ஜனதா தளத்தின் முதல் பட்டியலை முதல்வரும் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் இன்று (அக். 15) வெளியிட்டார். நாளை முதல் நிதிஷ் குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகட்பந்தனில் இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவடையவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ரகோபூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக, இன்று பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஹாஜிபூருக்கு வருகை தந்த தேஜஸ்வி யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவரது பெற்றோரும் முன்னாள் முதல்வர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நான் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பு, பாசம் மற்றும் ஆசீர்வாதங்களால் நான் வியப்படைகிறேன். இந்த வேட்புமனு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த வேட்புமனுவின் மூலம் ரகோபூர் தொகுதியும், பிஹாரும் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. இந்த வேட்புமனு பிஹார் முழுவதற்குமான மாற்றத்திற்கானது.

பிஹாரை முன்னோக்கி கொண்டு செல்லும் கனவு தற்போது நனவாகும் நிலையில் உள்ளது. பிஹார் மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர். 20 ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்த வலி, துன்பம், அநீதி, தடைகள், சிரமம், அராஜகம், சர்வாதிகாரம் என அனைத்தும் முடிவுக்கு வர உள்ளது. மாற்றத்தின் எதிரொலி சத்தமாக உள்ளது. பிஹார் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற இருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.