தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் புதைந்துள்ளன.
“புரன் குமாருக்கு நேர்ந்தது ஒரு குடும்பத்தின் விஷயம் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன. நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்பதே அந்த செய்தி” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்தில் தொடங்கி இந்தச் சம்பவத்தை அலச ஆரம்பிக்கலாம்.
7-ம் தேதி நிகழ்ந்த தற்கொலை: ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், கடந்த 7-ம் தேதி சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர், ஏடிஜிபியாக இருந்தார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், தற்கொலைக்கான காரணங்களை 8 பக்கங்களுக்கு தட்டச்சு செய்து அதில் கையொப்பமிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஹரியானாவின் மூத்த அதிகாரிகள் சிலர் தனக்கு எதிராக அப்பட்டமாக சாதிப் பாகுபாட்டைக் காட்டுவதாகவும், மன ரீதியாக துன்புறுத்தல்களை அளிப்பதாகவும், அவர்களால் தனக்கு நேர்ந்த அவமானங்களும், அட்டூழியங்களும் தாங்க முடியாதவை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
புரன் குமார், கடைசியாக காவலர் பயிற்சி அகாடமியில் பணியில் இருந்தார். அவரது பணிக் காலம் முழுவதுமே, காவல் அதிகாரிகளின் உரிமைகளை, பணி உயர்வுகள் தொடர்பான நியாயங்களுக்குக் குரல் கொடுத்துவந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார். கணவன், மனைவி இருவருமே ஐபிஎஸ், ஐஏஎஸ் என்ற அதிகாரத்தில் இருப்பவர்கள். ஆனால், கணவர் தற்கொலையால் உயிரிழக்க மனைவி நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
முதல் தகவல் அறிக்கை தொடங்கி… – இந்தச் சூழலில் புரன் குமாரின் உடல் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் மருத்துவமனை பிணவறையில் உள்ளது. மாநில அரசு, புரன் குமார் மனைவி, குடும்பத்தாரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. புரன் குமாரின் மகளுக்கு டிஎஸ்பி பதவி வழங்குவதாக மாநில கேபினட் அமைச்சர்கள் கிருஷ்ண லால் பன்வார் மற்றும் கிருஷ்ண பேடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், எந்த சமரசமும் தேவையில்லை டிஜிபி ஷத்ருஜித் கபூர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதே புரன் குடும்பத்தாரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஏற்கெனவே, முதல் தகவல் அறிக்கை விவகாகரத்திலும் புரன் குமாரின் மனைவி பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் தான் சில திருத்தங்களை செய்ய வைத்தார். “முதல் தகவல் அறிக்கை முழுமையானதாக இல்லை. எனது கணவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைவரது பெயரும் அதில் இடம்பெற வேண்டும். மேலும், எஸ்சி / எஸ்டி சட்டத்தின் சில ஷரத்துகளை சரிவர குறிப்பிடாமல் வழக்கு நீர்த்துப் போகும் வகையில் செய்துள்ளனர். அதையும் சரிவர சுட்டிக் காட்ட வேண்டும்” என்று அம்னீத் குமார், சண்டிகர் சீனியர் எஸ்பி கன்வர்தீப் கவுருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன் பின்னர் அக்.10-ல் தான் எஃப்ஐஆரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. சண்டிகர் ஐஜி புஷ்பேந்திர குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஐஜி புஷ்பேந்திர குமார், எப்ஐஆரில் எஸ்சி / எஸ்டி சட்டப்பிரிவு 3 (1998) சேர்க்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்துள்ளார். இந்த சட்டப் பிரிவானது, பட்டியலினத்தோருக்கு எதிரான தண்டனைக்குரிய பல்வேறு குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்களை பட்டியலிடுகிறது. அதேபோல் பட்டியலினத்தோர் அல்லாதோர் பட்டியலினத்தோர் மீது நிகழ்த்தும் குற்றங்களுக்கான தண்டனைகளையும் விவரிக்கிறது.
இவ்வாறாக தனது கணவர் தற்கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை தொடங்கி ஒரு மூத்த அதிகாரி போராடி வருகிறார். அதுவும் இந்த வழக்கின் மீது தேசிய அளவிலான கவனத்தைத் திருப்பியுள்ளது.
திடுக் திருப்பம்… – இந்நிலையில், புரன் குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்து வந்த விசாரணை அதிகாரியாக இருந்த ஏஎஸ்ஐ சந்தீப் குமார் லத்தார் தற்கொலை செய்து கொண்டது ஒரு திடுக் திருப்பம் எனலாம். இவர் ஏடிஜிபி புரன் குமார் ஒரு ஊழல் அதிகாரி என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் உயரதிகாரிகள் சாதிய அடக்குமுறை செய்ததாக சொல்ல, இன்னொருவர் புரன் குமார் லஞ்ச லாவன்யங்களில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கிறார். 3 பக்க தற்கொலை குறிப்பும், ஒரு வீடியோ பதிவையும் சந்தீப் குமார் லத்தா விட்டுச் சென்றுள்ளார்.
இப்படியான சூழலில் மாநில டிஜிபி ஷத்ருஜித் கபூரை மாநில அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. ரோத்தக் மாவட்ட எஸ்பி நரேந்திர பிஜார்னியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இவர்கள் தான் என் கணவரின் மரணத்துக்குக் காரணம் அவர்கள் கைது செய்யப்படும் வரை பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாது என்று பிடிவாதம் காட்டி வருகிறார் புரன் குமாரின் மனைவி.
இந்த வழக்கில், புரன் குமாரின் லேப்டாப் முக்கிய ஆதாரம் என்று காவல் துறை தரப்பு கூறுகின்றது. அவரது லேப்டாப்பை ஒப்படைக்கும்படி அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் இதுவரை லேப்டாப்பை ஒப்படைக்கவில்லை. அதேபோல் இன்றைக்குள் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கூடும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த வழக்கின் மீது அதிகரித்துள்ளது.