ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, தற்போது தேசிய அணியுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு, தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
Add Zee News as a Preferred Source
கடந்த ஆண்டு இறுதியிலிருந்து அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியதுடன், அதன்பின் தனது துல்லியமான ஆட்டத்தை மாற்றிவிடும் பந்துவீச்சால் உலகின் நம்பர் 1 டி20 சுழற்பந்து வீச்சாளராக உயர்ந்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த இவரின் இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு புதிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனி மீது இருந்த ரசிகத்தனம்
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வருண் சக்கரவர்த்தி, கிரிக்கெட் வாழ்க்கையையும், தனது அனுபவங்களையும் பற்றி பேசியுள்ளார். அதில், அவர் கூறிய ஒரு சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அவர் கூறியதாவது, “ஐபிஎல் போட்டிகள் சென்னை நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சிஎஸ்கே அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்கும் இடையில் என் வீடு இருந்தது. அப்போது ஒவ்வொரு முறை சிஎஸ்கே வீரர்கள் பேருந்தில் பயணம் செய்தால், நான் அந்த பேருந்தை பின் தொடர்ந்து செல்வேன். காரணம், என் மனதில் ஒரே ஆசை — மகேந்திர சிங் தோனியை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்பது” என்றார்.
தோனிக்கு எதிராகவே பந்து வீசினேன்
இன்று அதே தோனிக்கு எதிராகப் பந்துவீசும் நிலையையும், ஐபிஎல் போட்டிகளில் அவருக்கு எதிராக விக்கெட்டுகளும் பெற்றுள்ளேன் என்பதில் பெரும் பெருமை அடைகிறேன் என வருண் சக்கரவர்த்தி சிரித்தபடி கூறியுள்ளார். “ஆனால் தோனி பலமுறை என் பந்துகளை சக்தியாக அடித்து ரன்கள் எடுத்தார், அது எனக்குப் பெரும் கற்றலானது,” என்றும் அவர் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய டி20 வடிவில் சிறந்த வீரர்கள் குறித்து பேசும் போது வருண் கூறியதாவது, “கெயில், விராட் கோலி போன்றவர்களைப்போன்றே இப்போது அபிஷேக் சர்மாவும் டி20 வடிவில் அதிரடியான வீரராக மாறியுள்ளார். எந்த ஒரு பந்துவீச்சாளரையும் அஞ்சாமல் தைரியமாக ரன்களை குவிக்கும் அவரின் திறமை வருங்காலத்தில் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும்” என்றார்.
வருணின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருகாலத்தில் தோனியை பின் தொடர்ந்து ஓடிய ஒருவன், இன்றோ உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக விளங்குவது ரசிகர்களுக்கு பெரும் பெருமிதத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா டி20 தொடர் நெருங்குவதையொட்டி, வருணின் ஆட்டத்தை கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
About the Author
R Balaji