பாட்னா: மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் தேர்தலில் முதல்முறையாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது: இந்த தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்துள்ளது. எனவே தேஜஸ்விக்கு எதிராக ராகோபூரில் மற்றொரு வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. இது கட்சியின் நலனுக்காக எடுத்த முடிவு. இந்த தேர்தலில் நான் போட்டியிட்டால், அது கட்சிப் பணிகளில் இருந்து எனது கவனத்தை திசை திருப்பும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) நிச்சயம் தோல்வி அடையும். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார். என்டிஏ கூட்டணியில் கடும் குழப்பம் நிலவுகிறது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நிச்சயமற்ற சூழல் உள்ளது. பிஹார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெற்றால், அது நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தேசிய அரசியல் வேறு திசையில் பயணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.