வாஷிங்டன் டி.சி.,
பிரஸ்ஸல்ஸ் நாட்டில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட அளவிலான கூட்டம் நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. அமெரிக்கா சார்பில் அதன் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவர் நேட்டோ நட்பு நாடுகளின் மந்திரிகளின் முன்னிலையில் பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டார்.
ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக சேர்ந்து, ரஷியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து பேசினார். இதேபோன்று அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை ஐரோப்பிய நாடுகள் கொள்முதல் செய்யவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நேட்டோ பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பினார். அப்போது, அவர் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முக்கிய பகுதியான முன்பக்க ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, விமானம் உடனடியாக இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதனை அமெரிக்கா ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகனை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சீன் பார்னெல் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இதில், விமானத்தில் இருந்த பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் உள்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் புதிய திட்டத்தில் உறுப்பு நாடுகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று நேட்டோ கூட்டணி நாடுகளை ஹெக்சேத் வலியுறுத்தி கேட்டு கொண்டார். இந்நிலையில், ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சில மணிநேரத்தில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.