சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியுள்ளோம். பெரியார், அம்பேத்கர் பிறந்தநாளில் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமை, பகைமையை விரட்டும். அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மனதை வேதனையடையச் செய்கின்றன. எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது. அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் இதுபோன்ற துயரமான சம்பவம் நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்கிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்த குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆணவப் படுகொலைகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன்மூலம் இந்த அநீதியை தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.
ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த படுகொலைகளுக்கு சாதி மட்டுமின்றி, இன்னும் பல காரணங்களும் உள்ளன. எதன்பொருட்டு நடந்தாலும், கொலை, கொலைதான். அதற்கான தண்டனைகள் மிகமிக கடுமையாகவே தரப்படுகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறைக்கு உத்தரவு: யாரும், எதற்காகவும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனையின்றி தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு
உத்தரவாக போட்டுள்ளோம். எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.
அதேநேரம், இந்த கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமின்றி, அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். சமுதாயத்தில் சாதி வேற்றுமை, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். அனைத்து விதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதுகுறித்து தேவையான பரிந்துரைகளை அளிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்படும்.
அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இந்த பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை ஆணையம் வழங்கும். அதன் அடிப்படையில், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.