இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் தயாரித்த ‘அரட்டை’ செயலி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. வாட்ஸ்-அப் செயலிக்கு மாற்றாக பலரும் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஏஐ டூல்களின் பயன்பாடு தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள சூழலில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ போன்ற செயலிகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ முதலிடம் பிடித்துள்ளது. இதனை பெர்ப்ளெக்ஸிட்டி இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Perplexity is the number one app in Play Store in India across all categories. pic.twitter.com/TwTWk6SUqk
— Aravind Srinivas (@AravSrinivas) October 14, 2025
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துமாறு மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வரும் நிலையில், தற்போது அரட்டை, பெர்ப்ளெக்ஸிட்டி போன்ற இந்திய தயாரிப்புகள் அதிக வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பெர்ப்ளெக்ஸிட்டி வருடாந்திர சந்தாவை தனது பயனர்களுக்கு இலவசமாக ஒரு ஆண்டுக்கு வழங்கியது. சாட்ஜிபிடி, ஜெமினியை விட இதன் பயன்பாடு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதாக பயனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.