கோவை: ‘ஸ்டார்ட் அப்’ துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் வகையிலும் 2 லட்சம் சதுரஅடி பரப்பில் ‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய (ஸ்டெம்) துறைகளில் தேசிய அளவிலான திறனில் தமிழ்நாடு 18 முதல் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
தனித்துவமான ஆற்றலை கொண்டு செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றத்திற்கான வழிமுறைகள் உள்ளிட்டவற்றை கொண்டு ஒருங்கிணைந்த ‘ஸ்டார்ட் அப்’ சூழலை உருவாக்கி வருகிறது. காப்புரிமை பெறுவதில் தொடங்கி ஆய்வு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரத்யேகமான நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
‘ஏஐ’ தொழில்நுட்பம் மறுசீரமைப்பு காரணமாக அடிப்படை பணிகளுக்கு மட்டுமே மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ‘ஏஐ’ தொழில்நுட்ப உதவியுடன் தொழிலாளர்கள் திறமையாக பணியாற்றும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தற்போதே தொடங்கியுள்ளது. ‘ஏஐ’ கல்வி அகாடமி தொடங்கப்பட்டுள்ளது இதற்கு சிறந்த சான்று.
கோவை மாவட்டத்தில் ‘ஸ்டார்ட் அப்’ துறையில் 1,592 நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் 37 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ‘ஸ்டார்ட் அப்’ துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் வகையில் தமிழக அரசு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க திட்டமிட்டுள்ளது” என்றார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் பிரஜிந்திரா நவ்நீத், செயலாளர் கிருஷ்ணன், சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் (எஸ்டிபிஐ) இயக்குநர் மாதேஷா, புதுமை தொழில்நுட்ப குழுமத்தின் (ஐடிஎன்டி) முதன்மை செயல் அதிகாரி வனிதா, சிஐஐ தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், கருத்தரங்கு தலைவர் முருகவேல், சிஐஐ தென்னிந்திய துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்வில் ‘ஏஐ’ துறையில் திறன் மற்றும் போட்டியை எதிர்கொள்ள உதவும் வகையில் ‘ஏஐ அகாடமி’ தொடங்கப்பட்டது. தமிழக அரசு, சிஐஐ தொழில் அமைப்பு ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. சிஐஐ கோவை துணைத் தலைவர் நெளசாத் நன்றி கூறினார்.