அகமதாபாத்: குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்றார். அவருடன் மேலும், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேற்று ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்தைச் சந்தித்த முதல்வர் பூபேந்திர படேல், புதிய அமைச்சரவையை அமைக்க உரிமை கோரினார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் சூரத்தைச் சேர்ந்த, குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான ஹர்ஷ் சிங்வி, துணை முதல்வராக பதவியேற்றார். தற்போது அவருக்கு 40 வயது என்பதால், குஜராத்தின் துணை முதல்வராகப் பதவியேற்ற இளம் தலைவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
அமைச்சரவை மாற்றத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஸ்வரூப் தாக்கூர், பிரவின்பாய் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜூன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வகானி, பிரஃபுல் பன்ஷேரியா, கனு தேசாய் உள்ளிட்ட பலர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
புதிதாக அமைச்சராக பதவியேற்றவர்களில் 7 பேர் படிதார் சமூகத்தையும், 8 பேர் ஓபிசி பிரிவையும், 3 பேர் எஸ்சி பிரிவையும், 4 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். மூன்று பெண்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் 8 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.
குஜராத்தில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 162 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். குஜராத்தின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், திடீர் திருப்பமாக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. குஜராத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.