சாதிப் பெயர் நீக்க நடவடிக்கையில் தெளிவு இல்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: ‘சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், அதற்காக என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவில்லை’ என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அரசாணை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து வழக்கறிஞர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கான சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

இதற்கு முன்பு 1978-ல் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணை பின்னர் அமல்படுத்தப்படவில்லை. தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் சாதிப் பெயர்கள் இருப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இது அந்த அரசாணை தேவையற்றது என்பதை காட்டுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு சூட்ட வேண்டிய பெயர்கள் பட்டியலை பார்த்தால், அரசின் உண்மையான நோக்கம் சாதி ஒழிப்பு இல்லை என்பது தெரியவரும். தங்கள் கட்சியை சேர்ந்த, விருப்பமானவர்களின் பெயர்களைச் சூட்டும் நோக்கத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மக்களிடையே பிளவை உண்டாக்கும் வகையில் உள்ளது. மாதிரி பெயர்ப் பட்டியலில் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தேச பக்தர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

எனவே, தெருக்களின் சாதிப் பெயர்களை மாற்றும் அரசாசணையை ரத்து செய்தும், அதுவரை அரசாணையை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவால் பெரும் குழப்பம் ஏற்படும். ஆதார் கார்டு, வாகனப் பதிவுச் சான்று, பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாள அட்டைகளில் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் வாதிடும்போது, “இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மாநிலத் தலைநகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் வராத குழப்பம், இப்போது எப்படி வந்துவிடப் போகிறது. சாதிப் பாகுபாடு இருக்கக் கூடாது என அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், அதற்காக என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவில்லை. எனவே, அதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சாதிப் பெயர்களால் பிரச்சினை ஏற்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்வது மற்றும் சாதி பெயர்களை மாற்றுவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கலாம். ஆனால், அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.