புட்டபர்த்தி: ஆந்திராவின் புட்டபர்த்தியில் செயல்படும் சத்ய சாய் மருத்துவமனையில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
சத்திய சாய்பாபாவால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகம் தொடங்கப்பட்டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்பியல், கதிரியக்கவியல், மயக்கவியல், கண் மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. இந்த மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த சூழலில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்தின் இதய நோய் அறுவைச் சிகிச்சை பிரிவில் அண்மையில் ரூ.8 கோடியில் ரோபோடிக் கருவிகள் நிறுவப்பட்டன. இதன்மூலம் கடந்த 15-ம் தேதி ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்திய சாய் பாபா அருளால் சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்தின் இதய நோய் அறுவை சிகிச்சை பிரிவில் அதிநவீன ரோபோடிக் கருவிகள் பொருத்தப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின்படி இந்த கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளை ஒப்பிடும்போது உற்பத்தி செலவு மிகவும் குறைவு.
புதிய ரோபோடிக் கருவிகள் மூலம் மருத்துவர் சுதிர் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான குழு ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரோபோடிக் கருவி தொழில்நுட்பம் காரணமாக உலகின் எந்த மூலையில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள், புட்டபர்த்தியில் உள்ள நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.
ரஷ்யா மற்றும் டெல்லியை சேர்ந்த ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ரத்னாகர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சுதிர் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான எஸ்எஸ் இன்னோவேஷன்ஸ் நிறுவனம், ரோபோடிக் அறுவைச் சிகிச்சை கருவிகளை தயாரித்து ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்துக்கு வழங்கி உள்ளது. சாய் பாபாவின் தீவிர பக்தரான சுதிர் வஸ்தவா, ஹரியானாவில் இருந்து புட்டபர்த்திக்கு நேரில் வந்து முதல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.