புதுடெல்லி: ஆக்டா எப்.எக்ஸ். என்ற நிறுவனத்தின் ரூ.2,385 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பாவல் புரோஜோரோவ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஆக்டா எப்.எக்ஸ். என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘போரக்ஸ் டிரேடிங்’ என்ற அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் ஆக்டா எப்.எக்ஸ். கால் பதித்தது. அப்போது முதல் ‘போரக்ஸ் டிரேடிங்’ மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டில் ஆக்டா எப்.எக்ஸ். மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த ஜூன் 13-ம் தேதி மும்பை, டெல்லி, சென்னை, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்த சூழலில் ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.2,385 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் மூளையாக செயல்பட்ட பாவல் புரோஜோரோவ், ஸ்பெயினில் கைது செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிவின் புணே நகரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனம்
கடந்த 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் இந்தியாவில் இருந்து ரூ.5,000 கோடியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளது.
போரக்ஸ் டிரேடிங் என்ற பெயரில் அறிமுகமாகி ஆர்பிஐ அனுமதியின்றி கிரிப்டோ கரன்ஸி வர்த்தகத்திலும் இந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. சிட்பண்ட் மோசடியை போன்று இந்தியாவில் மோசடி நடைபெற்றிருக்கிறது. முதலில் சிறிய தொகையை லாபமாக வழங்கி முதலீட்டாளர்
களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். பின்னர் பெரிய முதலீட்டை பெற்று ஏமாற்றி உள்ளனர்.
ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் நிர்வாகிகள், பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட், ஸ்பெயின், எஸ்டோனியோ, ஜார்ஜியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து செயல்பட்டு உள்ளனர். இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்க ரஷ்யா மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இந்தியர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
ஆக்டா எப்.எக்ஸ். நிறுவன மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் ரூ.2,385 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முடக்கப்பட்டு உள்ளது. இதையும் சேர்த்து இதுவரை ரூ.2,681 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. 54 பேர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.