காபூல்,
ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது,
நட்புறவான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு வீரர்கள் பயணம் செய்தனர். பின்னர் உர்குனுக்கு திரும்பிய பிறகு, அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கோழைத்தனமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்க இருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் காண கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .
பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்ககேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும், மேலும் அவை கவனிக்கப்படாமல் போகக்கூடாது.
பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கானஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன், நமது தேசப்பற்று மற்ற அனைத்தையும் விட முன்னதாக இருக்க வேண்டும்.என தெரிவித்துள்ளார் .