காந்தி நகர்: குஜராத் பாஜக அரசின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவியேற்றனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து குஜராத் அமைச்சர்கள் 16 பேரும் நேற்று முன்தினம் பதவி விலகினர். இவர்களில் கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா. பர்ஷோத்தம்பாய் சோலங்கி ஆகிய 4 பேரை தவிர மற்ற அனைவரின் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை முதல்வர் பூபேந்திர படேல் சந்தித்து புதிய அமைச்சர்கள் பட்டியலை அளித்தார்.
இந்தப் பட்டியல் நேற்று காலையில் வெளியானது. இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவீன்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா உள்ளிட்ட 21 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இதையடுத்து காந்திநகரில் நடைபெற்ற விழாவில் 21 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விழாவில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா பங்கேற்றார்.
புதிய அமைச்சர்களில் 19 பேர் புதுமுகங்கள் ஆவர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஹர்ஷ் சங்கவி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்களுக்கான துறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
யார் இந்த ரிவாபா? – பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிதான் இந்த ரிவாபா ஜடேஜா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். பின்னர் 2022-ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கர்ஷன்பாய் கர்மூரை தோற்கடித்தார். 2024-ம் ஆண்டில், ரவீந்திர ஜடேஜாவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.